பாகிஸ்தானுக்குப் பாடம்: ஆசிய கோப்பை யு-19 போட்டியில் இந்தியா அபார வெற்றி... 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) கிரிக்கெட் தொடரில், குரூப் 'ஏ' பிரிவில் மோதிய பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி, பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கிய கனிஷ்க் சௌஹான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஒருமுனையில் ஆடிய ஆரோன் ஜார்ஜ் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளை விளாசிய அவர், 85 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மிடில் ஆர்டரில் கனிஷ்க் சௌஹான் (46 ரன்கள்) பொறுப்புடன் ஆடினார். இதனால், இந்திய அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது சய்யம் மற்றும் அப்துல் சுபான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் இந்திய பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக ஹூசைபா அஸன் (70 ரன்கள்) மட்டுமே நீண்ட நேரம் தாக்குப்பிடித்தார். கேப்டன் பர்ஹான் 23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்தியத் தரப்பில் பந்துவீச்சில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தான் அணியை 150 ரன்களுக்குச் சுருட்டினர். பேட்டிங்கில் 46 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்திய கனிஷ்க் சௌஹான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் யு-19 ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது வலுவான ஆட்டத்தை உறுதி செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
