அணு ஆயுதப் போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்கா பகீர் எச்சரிக்கை.!
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க செனட் சபையில், அந்நாட்டு உளவுத்துறை அமைப்புகளின் கூட்டறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் சமர்ப்பித்துள்ள இந்த 34 பக்க அறிக்கையில், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு 'அணு ஆயுதப் போர்' ஏற்படும் அபாயத்துடனேயே நீடித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் நேரடியாக ஒரு முழு அளவிலான போரை விரும்பவில்லை என்றாலும், பயங்கரவாத அமைப்புகள் உருவாக்கும் சிறிய தூண்டுதல்கள் கூட மிகப்பெரிய அணு ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அபாயத்திற்கு உதாரணமாக, 2025ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. 26 பேரின் உயிரைப் பறித்த அந்தத் தாக்குதல், இரு நாடுகளையும் போரின் விளிம்புக்கே கொண்டு சென்றதை அந்த அறிக்கை நினைவூட்டுகிறது. அப்போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடித் தலையீடு காரணமாகவே நிலைமை கட்டுக்குள் வந்ததாகவும், இல்லையெனில் அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும் என்றும் அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது. இருப்பினும், இப்போதும் பயங்கரவாத சக்திகள் ஒரு 'நெருக்கடிக்கான காரணியாக' செயல்படும் சூழல் நிலவுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல், பாகிஸ்தானின் ஏவுகணை வலிமை பற்றியது. பாகிஸ்தான் தற்போது உருவாக்கி வரும் அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள், வரும் காலங்களில் தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்காவின் நிலப்பரப்பையே தாக்கும் வல்லமை கொண்ட 'கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளாக' மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா, வடகொரியா மற்றும் ஈரானுடன் பாகிஸ்தானையும் இணைத்து, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் தரும் நாடுகளின் பட்டியலில் சேர்த்திருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இடையே எல்லையில் நிலவும் மோதல்களும் இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக இருக்கும் என அந்த அறிக்கை முடிக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
