இந்தியா பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி!
துபை நகரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைக்கான யு19 கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் மோதிய ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆயுஷ் மட்ரே (38 ரன்கள்) மற்றும் வைபவ் சூரியவன்ஷி (5 ரன்கள்) சொற்ப ரன்களில் வெளியேறினர். மறுமுனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஆரோன் ஜார்ஜ் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகள் உட்பட 85 ரன்கள் குவித்து அசத்தினார். மிடில் ஆர்டரில் கனிஷ்க் சௌஹான் 46 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது சய்யம் மற்றும் அப்துல் சுபான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் 41.2 ஓவர்களிலேயே 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹூசைபா அஸன் 70 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூட, ஆல்-ரவுண்டராக அசத்திய கனிஷ்க் சௌஹான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
