சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 3 மடங்கு உயர்வு!

சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சுவிஸ் வங்கிகளில் ஏராளமான இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான நிதியை இருப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கணக்கு மற்றும் தொகை விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது. இந்தியாவில் இது பெரும்பாலும் கருப்பு பணமாக கருதப்பட்டாலும், சுவிட்சர்லாந்து அதிகாரிகளோ இதை சட்டப்பூர்வ சொத்தாகவே கருதுகின்றனர்.
2024 ம் ஆண்டு தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பு டெபாசிட் செய்யப்பட்டிருந்த இந்தியர்களின் பணம் குறித்த விவரங்களை தற்போது சுவிஸ் தேசிய வங்கி வழங்கி இருக்கிறது. அதன்படி 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.37,600 கோடி) அளவுக்கு இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பு உள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் (1.04 பில்லியன் சுவிஸ் பிராங்க்) 3 மடங்கு அதிகமாக கருதப்படுகிறது. இந்த பணம் பெரும்பாலும் வங்கிகள், நிறுவனங்கள் இவைகளின் பணம் எனக் கூறப்படுகிறது.
தனிநபர் டெபாசிட் வெறும் 11 சதவீதம் அளவுக்கே அதிகரித்து இருக்கிறது. அதாவது 346 மில்லியன் சுவிஸ் பிராங்க் (சுமார் ரூ.3,675 கோடி) தான் தனிநபர் பணமாக உள்ளது. இது மொத்த பணத்தில் 10-ல் ஒரு பங்கு தான். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் இந்த அளவு அதிகரித்து இருப்பது 2021ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். அந்த ஆண்டில் 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்தது. சுவிஸ் வங்கிகளில் சாதனை அளவாக கடந்த 2006-ல் 6.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவுக்கு இந்தியர்களின் பணம் இருந்தது. பின்னர் இது படிப்படியாக சரிந்து வருவதாக கூறப்படுகிறது. 2011, 2017, 2020, 2022 மற்றும் 2023 ஆகிய சில ஆண்டுகளில் ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!