நுகர்வோருக்கு ரூ.10.60 லட்சம் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!
முன்பே இருந்த நோயை மறைத்ததாகக் கூறி மருத்துவக் காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட நபருக்குச் சேவை குறைபாடு மற்றும் நஷ்ட ஈடாகச் சேர்த்து ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரகுபதி ராஜா என்பவர், ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டுப் பாலிசியை (Health Insurance Policy) எடுத்திருந்தார். அவருடைய மனைவி சாந்தி ரகுபதி, குழந்தைகளைப் பார்ப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தபோது வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாகச் சென்னை திரும்பி ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

சிகிச்சைக்கான பணத்தைச் செலுத்திய பிறகு, காப்பீட்டுப் பாலிசியின் அடிப்படையில், அந்தத் தொகையைத் தனக்கு வழங்குமாறு ரகுபதி ராஜா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கோரியுள்ளார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், "ஏற்கனவே இருந்த நோயை மறைத்து இவர் பாலிசி எடுத்தார்" என்று கூறி, சிகிச்சைக்காகச் செலுத்தப்பட்ட பணத்தைத் தர மறுத்துள்ளது.
இந்த மறுப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புகார்தாரர், தனது வழக்கறிஞர் மூலம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ரகுபதி ராஜா, தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் கொண்ட அமர்வு, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை உறுதி செய்தது.

அதன்படி, அந்தத் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் கீழ்க்கண்ட தொகையை ரகுபதி ராஜாவுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது: மருத்துவச் செலவு: ரூ.10,00,000, சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடு: ரூ.50,000, வழக்குச் செலவுத் தொகை: ரூ.10,000 என மொத்தம்: ரூ.10,60,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அந்தத் தொகையைச் செலுத்தும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
