தவெக மாநாட்டில் 'கெத்து' காட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம்!
புதுச்சேரியில் பணியாற்றி வந்த துணிச்சலான ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவரான இஷா சிங், தற்போது மத்திய அரசின் உத்தரவின் பேரில் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பாதுகாப்புப் பணியை முன்னின்று கவனித்த இஷா சிங் முறையான அனுமதிச் சீட்டு (Pass) இல்லாத எவரையும் மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்தார்.

கட்சி நிர்வாகிகள் மற்றும் புஸ்சி ஆனந்த் ஆகியோர் தொண்டர்களை அனுமதிக்கக் கோரி அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அதற்குப் பதிலளித்த இஷா சிங், "பாதுகாப்பு விவகாரத்தில் காவல்துறைக்கு நீங்கள் உத்தரவிடாதீர்கள். கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் போல இங்கும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது. பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம்," என முகத்தில் அடித்தாற்போலப் பேசி அதிரடி காட்டினார்.
அவரது இந்த நேர்மையான மற்றும் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் வைரலானது. புதுவை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் அவரை நேரில் அழைத்து பாராட்டினர்.

இந்நிலையில் மத்திய அரசின் சார்பு செயலாளர் ராகேஷ்குமார் சிங் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி: இஷா சிங் (IPS) புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். புதுவை ஐ.ஜி. அஜித்குமார் சிங்களாவும் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுவை ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்மா ஜெய்ஸ்வாலும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இஷா சிங்கின் இந்த இடமாற்றம் வழக்கமான நிர்வாக ரீதியிலான மாற்றமா அல்லது த.வெ.க. மாநாட்டின் போது ஏற்பட்ட அரசியல் ரீதியான அதிர்வலைகளின் தாக்கமா என்பது குறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், நேர்மையான அதிகாரியாகப் பார்க்கப்படும் இஷா சிங்கின் மாற்றம் புதுச்சேரி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
