"தாக்குதலை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை!" ஈரான் திட்டவட்டம்!
மத்திய கிழக்கு ஆசியாவில் போர் மேகங்கள் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், லெபனான் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை எந்தவிதமான சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடப் போவதில்லை என ஈரான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இரும்புக்கரங்களுக்குப் பணியப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லெபனான் மீதான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் இந்தத் திடீர் முழக்கம் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், அந்த நாட்டையே நிலைகுலைய வைத்துள்ளது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் கைகோர்த்துக்கொண்டு, மறுபுறம் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை ஏற்க முடியாது எனச் சாடியுள்ளது. தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு, அமைதி திரும்பினால் மட்டுமே மேஜையில் அமர்ந்து பேசத் தயார் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரக ரீதியாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தத் திட்டவட்டமான முடிவால், மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க எடுக்கப்பட்டு வரும் சர்வதேச முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தாக்குதல்கள் தொடர்ந்தால், தாங்களும் போர்க்களத்தில் நேரடியாகக் குதிக்கும் வாய்ப்பிருப்பதாக ஈரான் சூசகமாக எச்சரித்துள்ளது. ஏற்கனவே ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், லெபனான் விவகாரத்தில் ஈரான் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, இந்தப் பிராந்தியத்தை ஒரு மிகப்பெரிய உலகப்போர் நிலையை நோக்கித் தள்ளுமோ என்கிற அச்சத்தை உலக நாடுகளிடையே விதைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
