ஆற்றின் மீதிருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்து விபத்து... 2 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீதிருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த இரும்புப் பாலத்தின் கீழ் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுமார் 15 முதல் 20 சுற்றுலாப் பயணிகள் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், இரண்டு பெண்கள் பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, வலுவான நீர் ஓட்டம் பாலம் இடிந்து விழுந்ததற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 15 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட இந்த பாலத்தின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!