'பராசக்தி' படக்கதை திருட்டு?! - சுதா கொங்கராவுக்கு நோட்டீஸ் - உயர்நீதிமன்றம் அதிரடி!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து 'செம்மொழி' என்ற கதையை எழுதி, 2010-ம் ஆண்டு திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்தப் படத்தைப் பற்றி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கூறியபோது அவர் என்னைப் பாராட்டினார். தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் மூலம் இக்கதை நடிகர் சூர்யாவிடம் சென்றுள்ளது. அவர் மூலம் இயக்குனர் சுதா கொங்கராவுக்குக் கதை தெரிய வந்துள்ளது.

முதலில் 'புறநானூறு' என்ற பெயரில் சூர்யா நடிப்பதாக இருந்த படம், தற்போது 'பராசக்தி' என்ற பெயரில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது. இது எனது 'செம்மொழி' கதையின் அப்பட்டமான திருட்டு என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “மனுதாரரின் புகார் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் விசாரித்து, விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு கதைகளும் ஒன்றுதானா என்பது குறித்து விளக்கம் அளிக்க இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

'பராசக்தி' திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு படக்குழுவினருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்யப்படும் அறிக்கையைப் பொறுத்தே படத்தின் வெளியீடு உறுதியாகும். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை டான் பிச்சர்ஸ் (Don Pictures) நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இதற்கு இசையமைத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
