போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்? ... இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?
இத்தாலியில் போப் பிரான்சிஸ் மிகக் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 88 வயதாகும் போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் பிப்ரவரி 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போப் பிரான்சிஸ் நுரையீரலின் ஒரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்ட நிலையில், தற்போது நோயின் தீவிரம் அதிகரித்து காணப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில், அவருக்கு பிப்ரவரி 19ம் தேதி புதன்கிழமை எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் தொற்றின் தன்மை தீவிரமாக இருப்பதாகவும், உயிர் பிழைக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிசுக்கு பாதுகாப்பு அளிக்கும் சுவிஸ் காவலர்கள், வாடிகனில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.

மேலும் அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், பத்திரிகைகளில் வெளியாவது போன்று எவ்வித ஒத்திகையும் செய்யவில்லை என்றும், வழக்கமான பணிகளையே தொடர்ந்து வருவதாகவும் சுவிஸ் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் எலியா சினோட்டி விளக்கம் அளித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு புதன்கிழமை நேரில் சென்ற இத்தாலி பிரதமர் மெலோனி, அவரின் உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். மெலோனி சுமார் 20 நிமிடங்கள் வரை மருத்துவமனையில் இருந்ததாகவும், போப் பிரான்சிஸ் வழக்கம்போல் நகைச்சுவை உணர்வுடன் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரை நேரில் சந்தித்த முதல் வெளிப்புற நபர் மெலோனி மட்டுமே. மருத்துவர்களும் போப் பிரான்சிஸின் பணியாளர்களை தவிர அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
