தாமிரபரணி நீர் லிட்டருக்கு ஒரு பைசா தான் கட்டணமா? நீதிபதிகள் அதிர்ச்சி!
தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை எடுப்பதற்கு, வெறும் ஒரு பைசா மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு அதிர்ச்சி தெரிவித்தனர். மேலும், ஒரு லிட்டரை ரூ.20-க்கு விற்கும் நிறுவனங்களுக்கு ஏன் இன்னும் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பியதுடன், இது குறித்துப் பதிலளிக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசுக்குச் செலுத்த வேண்டிய நீர் வரி பாக்கி சுமார் ரூ.250 கோடி வரை நிலுவையில் வைத்துள்ளன. தனியார் சிமெண்ட் ஆலைகள் மற்றும் இதர நிறுவனங்கள் இந்தக் கட்டண பாக்கியைச் செலுத்தாமல், தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து அதிகளவில் நீரை உறிஞ்சிப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், அளவுக்கு அதிகமாக நீர் எடுக்கப்படுவதால் தாமிரபரணியின் சுற்றுச்சூழல் அமைப்பும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எனவே, நிலுவையில் உள்ள நீர் வரி பாக்கியை வசூலிக்கவும், அந்த நிதியைக் கொண்டு தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, பொதுப்பணித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு பைசா வீதம் மட்டுமே தண்ணீர் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். "தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரைச் சந்தையில் ரூ.20க்கு விற்பனை செய்கின்றன. ஆனால், அரசு அவர்களுக்கு வழங்கும் தண்ணீருக்கு இன்னமும் ஒரு லிட்டருக்கு ஒரு பைசா தான் வசூலிக்டுகிறதா? 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட இந்தக் கட்டணத்தை ஏன் இன்னும் உயர்த்தவில்லை?" என்று கேள்வி எழுப்பினர்.

தாமிரபரணி ஆற்று நீர் கட்டணம் குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறியும் பொருட்டு நீதிபதிகள் சில உத்தரவுகளைப் பிறப்பித்தனர். தாமிரபரணி ஆற்றில் எத்தனை நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன. ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதுவரை மொத்தமாக எவ்வளவு தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கான மொத்தக் கட்டணம் எவ்வளவு? அதில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
