"திமுக தீய சக்தியா?" - விஜய் விமர்சனத்திற்கு கூலாக பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!
தமிழக அரசியலில் 'தமிழக வெற்றிக் கழக'த் தலைவர் விஜய்க்கும், திமுக-விற்கும் இடையேயான வார்த்தைப்போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரோட்டில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், திமுக-வை மிகக் கடுமையாகச் சாடினார். "மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஏன் திமுக-வை 'தீய சக்தி' என்று அழைத்தார்கள் என அப்போது சிந்திப்பேன், ஆனால் இப்போது தான் அதன் உண்மையான அர்த்தம் புரிகிறது" என்று கூறிய விஜய், திமுக என்பது ஒரு தீய சக்தி என்றும், தனது தவெக என்பது ஒரு 'தூய சக்தி' என்றும் முழங்கினார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது இந்தத் தீய சக்திக்கும் தூய சக்திக்கும் இடையேயான நேரடிப் போட்டியாகவே இருக்கும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்த மூத்த தலைவர் செங்கோட்டையன் குறித்துப் பேசிய விஜய், "அவர் எங்கள் கட்சியில் இணைந்தது மிகப்பெரிய பலம்; அவரைப் போல இன்னும் பல தலைவர்கள் இணைய உள்ளனர், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். விஜய்யின் இந்த 'தீய சக்தி' விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியது. குறிப்பாக, நீண்ட நாட்களாக அமைதி காத்து வந்த விஜய், தற்போது நேரடியாகத் திமுக-வைத் தாக்கிப் பேசுவது 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் இந்த விமர்சனம் குறித்துச் செய்தியாளர்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மிகவும் நிதானமாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் பதிலளித்த உதயநிதி, "திமுக-வைத் தீய சக்தி என விஜய் விமர்சித்தது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால், என்றைக்காவது இதே கேள்வியை நீங்கள் விஜய்யிடம் கேட்டிருக்கிறீர்களா?" என்று எதிர்கேள்வி கேட்டுப் பதிலடி கொடுத்தார். விஜய்யின் கடுமையான விமர்சனத்திற்கு நேரடியாகக் கோபப்படாமல், செய்தியாளர்களை நோக்கியே உதயநிதி கேள்வி எழுப்பியது அரசியல் அரங்கில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
