லெபனானில் ரத்த ஆறு...118 குழந்தைகள் உட்பட 1001 பேர் பலி.. !
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் கோர முகத்தை எட்டியுள்ளன. கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் இந்தத் தாக்குதல்களில், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,001 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் நேற்று (மார்ச் 19) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லெபனானின் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி வருவதால், பொதுமக்களின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தக் கோரத் தாக்குதலில் இதுவரை 118 குழந்தைகள் மற்றும் 79 பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 2,584-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "ராணுவ இலக்குகளைத் தாக்குகிறோம்" என்று இஸ்ரேல் கூறினாலும், அப்பாவி மக்களும் குழந்தைகளும் பலியாவது சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ரூட் நகரின் முக்கியக் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடித் தப்பியோடி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் உயரிய மதகுரு ஆயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காமேனியின் மறைவுக்குப் பழிவாங்க ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தற்போது லெபனான் மீது 'ஆபரேஷன்' நடத்தி வருகிறது. போர் நீடிப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளதுடன், உலகப் பொருளாதாரத்திலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
