இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் கட்டாயம் வாசிக்க வேண்டும்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 76 ஆவது ஆண்டை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, இன்று (புதன்கிழமை, நவம்பர் 26) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (Preamble) வாசிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை உள்ளடக்கி, இந்திய திருநாட்டை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னதப் படைப்பாக பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த இந்திய அரசமைப்புச் சட்டம் திகழ்கிறது. இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, சமநிலை மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றைத் தமிழக அரசு என்றும் போற்றிப் பாதுகாத்து வருவதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம், பொதுநலத்தை உறுதிப்படுத்துவது ஆகியவை தமிழ்நாடு அரசின் தலையாய நோக்கம் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி, கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்குள்பட்டு, மாநில சுயாட்சியே தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்ற உறுதிப்பாட்டுடன் மாநிலத்தின் வளர்ச்சி நோக்கித் தொடர்ந்து செயல்படும் அரசாகத் தமிழ்நாடு அரசு இயங்கி வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, குறிப்பாகப் பிரிவு 15(3)-இன் அடிப்படையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு வழிவகைகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, தமிழக அரசு, 'விடியல் பயணம்', 'புதுமைப் பெண் திட்டம்', 'மகளிர் உரிமைத் திட்டம்' போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை வகுத்துச் சிறப்பான முறையில் அவற்றைச் செயல்படுத்தி வருவதாகவும், இது மகளிரின் அடிப்படை உரிமைகளை மேலோங்கச் செய்வதில் அரசுக்குப் பெருமை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76-ஆவது ஆண்டை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இன்று (நவம்பர் 26) காலை 11 மணிக்கு முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைத் தலைமை அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்துச் சார்நிலை அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எனப் பொதுப் பணியில் உள்ள அனைவரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசால் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.

அலுவலகங்களில் முகப்புரையை வாசிப்பது மட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அதன் நெறிமுறைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி வினா (Quiz) நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையானது, அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் எடுத்துச் செல்வதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
