நிமிஷத்துல உசுரு போயிருக்கும்... ரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்து தூங்கிய இளைஞர்!
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் தூங்கிய நபர் ஒருவரின் உயிரை மயிரிழையில் ரயில்வே ஊழியர் மீட்ட சம்பவம், புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவம், ரயில்வே பாதுகாப்பில் சிறு கவனக்குறைவும் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது.
பிரயாக்ராஜில் உள்ள தண்டவாளப் பகுதியில் அந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிக்காக ஒரு ரயில் எஞ்சின் மெதுவாக அந்தத் தடத்தில் வந்துள்ளது. இதைக் கவனித்த ரயில்வே பணியாளர் ஒருவர், தண்டவாளத்தில் ஒரு மனித உருவம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தண்டவாளத்தில் கிடப்பவர் மீது எஞ்சின் ஏறிவிடுமோ என்ற பதற்றத்தில், அந்தப் பணியாளர் உடனடியாகக் கூச்சலிட்டு ஓடிச் சென்று அந்த நபரைத் தூக்கிப் பக்கவாட்டில் தள்ளினார். அவர் தள்ளிய அடுத்த சில வினாடிகளில் ரயில் எஞ்சின் அந்த இடத்தைக் கடந்து சென்றது. அந்த ஊழியரின் மின்னல் வேகச் செயலால், அந்த நபரின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்டது.
தண்டவாளத்தில் படுத்துக் கிடந்தவர் போதையில் இருந்தாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று ஒரு உயிரைக் காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ரயில்வே விதிகளின்படி தண்டவாளத்தில் நடப்பதும், அமர்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாக, ரயில் வரும்போது தண்டவாளப் பகுதிகளில் கவனக்குறைவாக இருப்பது இது போன்ற பேராபத்துகளுக்கு வழிவகுக்கும் என ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ, ரயில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
