ஜனவரி வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு.. தொடர் விடுமுறையால் பணபரிவர்த்தனைகளை திட்டமிட்டுக்கோங்க!
2026-ம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் என முக்கிய விசேஷங்கள் வருவதால், ஜனவரி மாதத்தில் வங்கிப் பணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தொடர் விடுமுறைகளால் வங்கிப் பணிகள் பாதிக்குமா?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் என்றாலே பண்டிகைகளும், கொண்டாட்டங்களும் களைகட்டும். குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை ஜனவரி மாதம் பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். வரும் 2026 ஜனவரியில், மாதத்தின் நடுப்பகுதியில் பொங்கல் பண்டிகைக்காகத் தொடர் விடுமுறைகள் வருகின்றன. ஜனவரி 14-ம் தேதி தொடங்கி ஜனவரி 17-ம் தேதி வரை முறையே போகி, பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் என வரிசையாக நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

புத்தாண்டு மற்றும் தேசிய விடுமுறைகள்
ஜனவரி முதல் தேதியே ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையுடன் வங்கிப் பணிகள் தொடங்குகின்றன. கேரளா போன்ற மாநிலங்களில் ஜனவரி 2-ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் மன்னம் ஜெயந்திக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதியும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23-ம் தேதியும் சில மாநிலங்களில் வங்கிகள் இயங்காது. மேலும், நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்குப் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை நாட்கள்
வழக்கமான பண்டிகை விடுமுறைகள் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அந்த வகையில் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும், ஜனவரி 10 மற்றும் 24 ஆகிய சனிக்கிழமைகளிலும் வங்கிகள் செயல்படாது.

வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியவை
வங்கி விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளூர் விடுமுறை நாட்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது அவசியம். குறிப்பாக மாத இறுதியில் வரும் குடியரசு தின விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள் (திங்கட்கிழமை) வருவதால், அந்த வார இறுதியில் தொடர் விடுமுறை அமைய வாய்ப்புள்ளது.
வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், ஏடிஎம் (ATM) சேவைகள், மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகள் தடையின்றி 24 மணிநேரமும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவசரப் பணத்தேவைகளுக்கு டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
