ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் இந்தியா தோல்வி!
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் 14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஆக்கிப் (21 வயதுக்குட்பட்டோர்) போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான இந்திய அணி, 7 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனியிடம் 1-5 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை நழுவ விட்டது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய ஜெர்மனி, இந்தியத் தடுப்பரணை எளிதில் உடைத்தது. லுகாஸ் கோசெல் (14-வது நிமிடம், பெனால்டி ஸ்டிரோக்) மற்றும் திதஸ் வெக்ஸ் (15-வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் போட்டு இந்தியாவைப் பின் தங்க வைத்தனர். பின்னர் லுகாஸ் கோசெல் (30-வது நிமிடம்), ஜோனஸ் வான் கெர்சம் (40-வது நிமிடம்), பென் ஹேஸ்பேச் (49-வது நிமிடம்) ஆகியோர் மேலும் கோல்கள் போட்டு ஜெர்மனியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்திய அணி ஒரு வழியாக 51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் அன்மோல் எக்கா ஒரு கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். முடிவில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இறுதி சுற்றை எட்டியது. வருகிற டிசம்பர் 10ம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. அதே நாளில் 3-வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
