JUST IN: திரண்ட மக்கள்... இந்து முன்னணி போராட்டம்.. திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

 
திருப்பரங்குன்றம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று (டிசம்பர் 3) நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகப் பதற்றம் உருவாகி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டுமே கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். ஆனால், இந்து முன்னணி உள்ளிட்ட பக்தர் அமைப்புகள், மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணிலும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

திருப்பரங்குன்றம்

நீதிமன்ற உத்தரவு:

இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

கோயில் நிர்வாகத்தின் செயல்:

இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தாலும், நீதிமன்ற உத்தரவு இருந்ததால் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், கோயில் நிர்வாகம் வழக்கம் போல உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் மட்டும் தீபத்தை ஏற்றியது.

திருப்பரங்குன்றம் முருகன் முருகர்

பதற்றம், போராட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷனருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இன்று மாலை 6 மணிக்குத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் மனுதாரர் உட்பட 10 பேர் சிஐஎஸ்எஃப் (CISF) பாதுகாப்போடு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால், கோயில் முன்பு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் மலை உச்சிக்குச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சில காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

144 தடை உத்தரவு பிறப்பிப்பு

கோயில் பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுவதைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பேணவும், கூட்டம் கூடத் தடை விதித்து மதுரை காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக, திருப்பரங்குன்றம் பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!