கமல் எம்.பி. ஆகிறார்... 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கல் நேற்று(திங்கள்கிழமை) மாலையுடன் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 13 போ் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ஜூன் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது. இதில் திமுகவின் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், அதிமுகவின் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வேட்புமனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் முன்மொழிவு கடிதம் இல்லாததால் அனைத்து சுயேச்சைகளின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முதல்முறையாக எம்.பி.ஆகிறார்.
ஜூன் 12ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களைத் திரும்பப்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னா் போட்டியிருந்தால் 19ம் தேதி தோ்தல் நடைபெறும். போட்டி இல்லையெனில் ஜூன் 12ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
