குவைத் ட்ரோன் தாக்குதலில் ராமநாதபுரம் இளைஞர் பலி ... கதறும் மனைவி!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் பதற்றம் தற்போது அப்பாவி தமிழர்களின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ளது. குவைத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட அதிரடி ட்ரோன் தாக்குதலில், ராமநாதபுரம் மாவட்டம் அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்ற 36 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 10 ஆண்டுகளாக அங்கு எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த அவர், வேலை முடிந்து அறைக்குத் திரும்பிய நேரத்தில் மீண்டும் அவசரப் பணிக்காக அழைக்கப்பட்டபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது.
தாக்குதலின் போது ஆலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி சந்தான செல்வம் துடிதுடித்து உயிரிழந்ததாக அவரது நண்பர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இந்தத் திடீர் ட்ரோன் தாக்குதல் சம்பவம் குவைத்தில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது. இந்தியத் தூதரகம் இந்த மரணத்தை உறுதி செய்துள்ள நிலையில், உயிரிழந்த சந்தான செல்வத்திற்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"கம்பெனியிலிருந்து கூப்பிடுகிறார்கள், போய்விட்டு வருகிறேன்" என்று கடைசியாகப் பேசிய கணவர், தற்போது சடலமாக நாடு திரும்புவதை எண்ணி அவரது மனைவி கௌசல்யா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தான செல்வத்தின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், உடல் நாளை திருச்சி விமான நிலையம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் மீண்டும் மேலோங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
