மழையிலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்... பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
நாளை டிசம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள பரணி தீப நாளில் கிரிவலப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு வழங்க 50 ஆயிரம் லட்டுகள் தயாராகின்றன. ஆண்டுதோறும் வளவனூர் அருகே உள்ள குமாரகுப்பம் கிராம மக்கள் பாரம்பரியமாக லட்டு பிரசாதம் செய்து, கிரிவலக்குச் செல்வோர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
தொடர்ந்து 22வது ஆண்டாக நடக்கவுள்ள இச்சேவையில், இந்த முறை 50 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். லட்டுப் பிரசாதம் வழங்குவதால் குடும்ப நலமும், வளமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்பணியை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கார்த்திகை தீபம் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியிருந்த நிலையில், பரணி தீபம் 3ம் தேதி அதிகாலை கருவறையில் ஏற்றப்பட்டு, அதே மாலை 2,668 அடி உயர அண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்படும். தீபத்தை தரிசிப்பது வாழ்க்கை பூரணத்திற்கும், முக்திக்கும் வழிகாட்டும் என பக்தர்கள் நம்புவதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் திருவண்ணாமலையில் கூடுகின்றனர்.
இந்த முறை பெரும் திரளான பக்தர்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வழிபாடு சீராக நடைபெற பல்வேறு அனுசரணைகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களின் நலனுக்காக 9 முக்கிய சாலைகளிலும், 24 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 130க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்குள் இலவச மற்றும் சிறப்பு தரிசனத்திற்காக 114 பகுதிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதோடு, கிரிவலப்பாதை முழுவதும் 1,060 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வலுவாக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
