பத்மநாபசுவாமி கோயிலில்'லட்ச தீபம்' திருவிழா... 6 ஆண்டுகளுக்கொரு முறை கோலாகலம்!
உலகிலேயே அதிக செல்வம் கொண்டதாகக் கருதப்படும் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில், சுமார் 1.5 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோயில் வளாகமே ஒளியில் மிதக்கும் 'லட்ச தீபம்' விழா நேற்று அரங்கேறியது. கி.பி. 1750-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் இந்த விழா தொடங்கி வைக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் இந்த விழா, ஆன்மீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
கடந்த நவம்பர் 20ம் தேதி தொடங்கிய 56 நாட்கள் நீடிக்கும் 'முராஜாபம்' (மந்திர பாராயணம்) விழாவின் நிறைவுப் பகுதியாக இந்த லட்ச தீபத் திருவிழா நடைபெறுகிறது. சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் நடைபெற்ற அதே வேளையில், இங்கும் மாலை 6:30 மணிக்கு பிரதான நிலவிளக்கு ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.

கோயில் கோபுரம் முதல் வாசல் வரை வரிசையாக லட்சக்கணக்கான நெய் விளக்குகள் ஏற்றப்பட்டதில், ஒட்டுமொத்த கோயிலுமே தங்கத்தைப் போல மின்னியது. இரவு 8:30 மணியளவில், பத்மநாபசுவாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த வைபவத்தைத் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் முன்னின்று நடத்தினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, முறையான அனுமதிச் சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று விழாவைக் காண முடியாத பக்தர்களுக்காக, இன்றும், நாளையும் மாலை வேளைகளில் லட்ச தீபங்கள் ஏற்றப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தத் திருவிழாவிற்காகப் பயன்படுத்தப்படும் நெய் மற்றும் விளக்குகளுக்காகப் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை மன்னர் குடும்பமும், பக்தர்களும் ஏற்றுள்ளனர். கேரளாவிலிருந்து மட்டுமின்றி, தமிழகம் மற்றும் கர்நாடகாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீபத் திருவிழாவைக் காணத் திருவனந்தபுரத்தில் குவிந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
