14000 ஊழியர்கள் பணிநீக்கம்? அமேசான் அதிரடி அறிவிப்பு...!
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், அடுத்த மாதம் (மே 2026) மேலும் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஜனவரி மாதம் 16,000 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியிருந்த நிலையில், இந்த புதிய செய்தி ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியையும், கவலையையும் உண்டாக்கியது.

குறிப்பாக, அமேசான் வெப் சர்வீசஸ் , சில்லறை வர்த்தகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைகளில் உள்ள நடுத்தர மேலாண்மைப் பணியிடங்கள் இந்த ஆட்குறைப்பில் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அமேசான் நிறுவனம் தற்போது இதற்கு அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. "மே மாதம் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்ற தகவலில் உண்மையில்லை; அந்தச் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை" என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கவும், நிர்வாக அடுக்குகளைக் குறைக்கவும் அமேசான் தொடர்ந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026-ம் நிதியாண்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்புகளுக்கு 125 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதால், சில துறைகளில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, தற்போதைய பணிநீக்க வதந்திகளுக்கு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்திருப்பது அமேசான் ஊழியர்களுக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ளதாகத் தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
