இடச் சிக்கல் தீர்ந்தது... விஜய் கூட்டத்திற்கு அனுமதி... ₹50,000 வாடகை, ₹50,000 டெபாசிட்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஈரோடு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இடம், விஜயபுரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்பதால், அனுமதி பெறுவதில் சிக்கல் நீடித்தது. தற்போது, இந்து சமய அறநிலையத்துறை அந்த இடத்தை உபயோகிக்க ₹50,000 வாடகை மற்றும் ₹50,000 டெபாசிட் தொகையை நிர்ணயித்து, அனுமதி வழங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள சரளைப் பகுதியில் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வை டிசம்பர் 18-ஆம் தேதி நடத்தத் தவெக திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தவெக நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்திருந்தனர். அப்போது, மாநாடு நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்பதால், இந்து சமய அறநிலையத்துறையிடமும் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை, அந்த இடத்தைப் பயன்படுத்த ₹50,000 வாடகையும், ₹50,000 டெபாசிட் தொகையும் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 5 நிபந்தனைகளையும் (கூட்டம் முடிந்தபின் சுத்தம் செய்வது உள்ளிட்டவை) அத்துறை விதித்துள்ளது.

இதே வேளையில், மாநாடு நடைபெற உள்ள பகுதியைக் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்கள் வந்து செல்லும் வழி, விஜய் பேசும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தில் கூடும் மக்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியதால், இடம் தொடர்பான சிக்கல் முழுமையாகத் தீர்ந்துள்ளது. காவல்துறை தரப்பிலும் இந்தக் கூட்டத்திற்கு வாய்மொழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
