லாரி - மினி பேருந்து மோதி கோர விபத்து... தென்னாப்பிரிக்காவில் 11 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவில் தெற்கு டர்பன் பகுதியில் உள்ள இசிபிங்கோ என்ற இடத்தில், லோட்டஸ் பார்க் அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று காலை சுமார் 7:30 மணியளவில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்தும், ஒரு பெரிய லாரியும் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சுமார் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மினி பேருந்தின் ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாகாணப் போக்குவரத்துத் துறை அதிகாரி சிபோனிசோ துமா மற்றும் மீட்புப் படையினர் வழங்கிய தகவலின்படி லாரி ஓட்டுநர் விதிமுறைகளை மீறி திடீரென 'யு-டர்ன்' செய்ய முயன்றதே இந்த விபத்திற்குக் காரணம் என்று நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான லாரியின் டயர்கள் முற்றிலும் தேய்ந்த நிலையில் இருந்ததும், அந்த லாரி சட்டவிரோதமாக இயக்கப்பட்டதும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. காலாவதியான உரிமம்: மினி பேருந்து ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இது போன்ற விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன: கடந்த ஜனவரி 19-ம் தேதி ஜோகன்னஸ்பர்க் அருகே நடந்த இதே போன்ற விபத்தில் 14 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர். அந்தச் சோகம் மறைவதற்குள் மீண்டும் 11 பேர் பலியாகியிருப்பது அந்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மினி பேருந்துகள் தென் ஆப்பிரிக்காவில் 70% மக்களால் பயன்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து ஊடகமாகும். ஆனால், இவற்றின் அதிக வேகம் மற்றும் பராமரிப்பின்மை காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி உயிர்ச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
