அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி... தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்!
வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியின் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலைகொண்ட பகுதி: அந்தமான் மற்றும் மலேசியாவுக்கு இடைப்பட்ட வங்கக் கடல் பகுதிக்கு வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது வட இலங்கை அருகே நீடித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் 'காற்று குவிதல்' ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று (டிசம்பர் 16) இரவில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, காங்கேசன்துறை, தலைமன்னார் வரையில் மழை பெய்து கொண்டிருந்தது. தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி எனப் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. நேற்று மதியத்துக்குப் பிறகு மேற்குப் பகுதிகளிலும் கர்நாடகா வரையிலும் மழை பெய்தது.
தென் மாவட்டங்களில் 150 மிமீ வரை மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் திசை மாற்றம் காரணமாகத் தாழ்வுப்பகுதி தெற்கு நோக்கிச் செல்லும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் பரவலாகப் பெய்யும் வாய்ப்பும் உள்ளது. பெரும்பாலும் எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பாகத் தென் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம். இன்றும் கடலோரப் பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யும். குறிப்பாகத் தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு, மணல்மேடு உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை பெய்யும் வாய்ப்புள்ளது. இருப்பினும், கிழக்குத் திசை மற்றும் வடக்கில் இருந்து வரும் குளிர் காற்றின் காரணமாகக் குளிர் மற்றும் பனி மூட்டம் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது.
சென்னையில் இன்று (டிசம்பர் 17) வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
