எம்பிராய்டரி ஆலையில் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் 2 பேர் பலி, 11 பேர் படுகாயம்!
குஜராத் மாநிலம் சூரத்தின் கபோத்ரா பகுதியில் உள்ள ஒரு எம்பிராய்டரி தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட கோரத் தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரச்சனா சர்க்கிள் அருகே அமைந்துள்ள அந்தத் தொழிற்சாலையில் திடீரெனத் தீப்பிடித்த நிலையில், அங்கிருந்த இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் சிக்கி இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர்கள் வெடித்ததில் 2 பேர் பலி.. 11 பேர் படுகாயம்! pic.twitter.com/h9E6ZuYcum
— Dina Maalai (@DinaMaalai) March 19, 2026
தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மளமளவெனக் கட்டிடம் முழுவதும் பரவியது, இதனால் அந்தப் பகுதியே கரும்புகையால் சூழ்ந்து போர்க்களம் போலக் காட்சியளித்தது. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தொழிற்சாலையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் துணிகள் தீயில் கருகிச் சாம்பலாகின.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாகத் தீப்பிடித்ததா அல்லது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான தொழில் நகரமான சூரத்தில் நிகழ்ந்த இந்தத் தீ விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
