மகா தீபத் திருவிழா... திருவண்ணாமலைக்கு 15 சிறப்பு ரயில்கள் இயக்கம் - அட்டவணை வெளியீடு!
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, வரும் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் 15 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலான ரயில்கள் இயக்கப்பட இருப்பது பக்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியும், மகா தேரோட்டம் நவம்பர் 30 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக, வரும் டிசம்பர் 3 ஆம் தேதி மகா தீபப் பெருவிழா நடைபெற இருக்கிறது.

இந்த ஆண்டு மகா தீபத் திருவிழாவில், சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்காகச் சிறப்புப் பேருந்துகளும், கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்குக் கூடுதலான எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகமும், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரையும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தினர். அதன் விளைவாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் மொத்தம் 15 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் விவரம் பின்வருமாறு: திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலைக்கு: 2 நடைகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு: 2 நடைகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு: அதிகபட்சமாக 8 நடைகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு: 6 நடைகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலைக்கு: 4 நடைகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

வழக்கமாக இயக்கப்படும் தினசரி ரயில்கள் மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில்கள் அனைத்தும் சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களின் பயண நேர விவரங்கள் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து, மேலும் சில சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெற்கு ரயில்வே தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
