மகா தீபத் திருவிழா... திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காகக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், தொலைதூரப் பயணிகள் எளிதாக வந்து செல்லவும் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, இந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் இந்தத் திருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் திரண்டு வருவது வழக்கம். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு அளிப்பது மற்றும் நெரிசல் சம்பவங்களைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை (TNSTC) சார்பில் பல்வேறு தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை, மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்வதற்கு வசதியாக இந்தச் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளைப் பொதுமக்கள் WWW.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், TNSTC மொபைல் APP மூலமாகவும் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் மட்டுமின்றி, தென்மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காகச் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படும். மேலும், மறு மார்க்கமாகப் பக்தர்கள் திரும்புவதற்காக, டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்குத் திருவண்ணாமலையிலிருந்து நெல்லைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வட தமிழகத்தில் உள்ள பக்தர்களின் வசதிக்காகப் பல சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 30, டிசம்பர் 3, 4, மற்றும் 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், டிசம்பர் 3, 4, மற்றும் 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக வேலூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளின் இந்த அறிவிப்பு, தீபத் திருவிழாவிற்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
