மகா தீபத்திருவிழா: தேரோட்டம் தொடங்கியது.. திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திகழும் திருவண்ணாமலையில், புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த முக்கியத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும், சட்டம்-ஒழுங்கைப் பேணவும், மூன்று நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில், நினைத்தாலே முக்தி தரும் என்று நம்பப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த நவம்பர் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று காலை விமரிசையாகத் தொடங்கியது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் இன்று காலை முதலே குவியத் தொடங்கியுள்ளனர். வருகின்ற டிசம்பர் 3ம் தேதி இந்தத் திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன: காலை 4 மணிக்கு கோவிலின் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலையின் மீது புகழ்பெற்ற மகா தீபம் ஏற்றப்படும்.

லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடும் இந்த முக்கிய நாட்களை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதற்காகவும், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, டிசம்பர் 2, 3, மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களுக்கு மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. இந்த உத்தரவு தனியார் மதுபானக் கடைகள் (பார்) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
தீபத் திருவிழாவின்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவும், பக்தர்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தரிசனம் செய்வதை உறுதி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர், திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பிற்காகப் பலத்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மேலும், சாலைகளில் பக்தர்களின் வசதிக்காகப் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
