19 வருடங்களுக்குப் பின் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசியில் அமைந்துள்ள காசி விசுவநாத சுவாமி கோவில் பழம் பெருமைமிக்கது. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் பராக்கிரம பாண்டியனால் இந்த கோவில் கட்டப்பட்டது. மன்னன் தனது ஆட்சி குறிப்பேட்டில் ‘இறைவனுக்கு எழுப்பிய இந்த ஆலயம் காலத்தால் சிதிலமடையுமானால் அந்த சிதைவுகளை அகற்றி செப்பம் செய்பவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
17ம் நூற்றாண்டு இறுதி மற்றும் 18ம் நூற்றாண்டு தொடக்கத்திற்கு இடைபட்ட காலத்தில் இந்த கோவிலின் கோபுரம் தீயினால் சிதைவடைந்தது. அது மொட்டை கோபுரமாகவே காட்சியளித்து வந்தது. அதன் பின்னர் அந்த மொட்டை கோபுரம் அகற்றப்பட்டு கோபுரம் இல்லாமல் வாசல் மட்டும் கோவிலில் இருந்தது. பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது இந்த கோவிலில் புதிய கோபுரம் கட்டி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு காசி விசுவநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகமான அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 5 மணிக்கு விநாயகர், முருகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 6.45 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை நடத்தப்பட்டது.
காலை 7.15 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க பட்டு வண்ண குடை பிடித்து கடம் அதாவது புனிதநீர் குடம் ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 9.15 மணிக்கு கோவில் ராஜகோபுரம், விமான கோபுரங்களில் உள்ள கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி... காசிவிசுவநாதரே போற்றி’ என்று பக்தி கோஷம் எழுப்பினர். விண்ணதிர ஒலித்த இந்த கோஷம் கோவில் முழுவதும் எதிரொலித்தது. பக்தர்கள் மீது புனித நீரும் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காசிவிசுவநாதர், உலகம்மன், பாலமுருகன் சன்னதி மூலஸ்தானத்திலும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேதசிவாகம் வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினார்கள்.
இரவில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் செண்டை மேளம் முழங்க சுவாமி-அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வருதல் நடந்தது. ரதவீதிகளில் பக்தர்கள் திரளாக நின்று தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!