திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.. லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!

 
திருவண்ணாமலை மகாதீபம் கார்த்திகை

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை (புதன்கிழமை, டிசம்பர் 3) மாலை 6 மணியளவில் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தன்று சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதீகம்: திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே எழுந்த அகந்தையை அடக்க, சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாகக் காட்சியளித்தார். அந்த நிகழ்வைப் போற்றும் வகையில்தான் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

அருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையே சிவனாக வணங்கப்படுகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாகக் காட்சி கொடுத்ததால், அதன் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் நாளை நடைபெற உள்ளன:

திருவண்ணாமலை மகாதீபம் கார்த்திகை

கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். பஞ்சமூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்குச் சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுவதுடன், மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று பக்தி கோஷம் முழங்குவார்கள். ஒளி வெள்ளத்தில் நகரம்: மகாதீபம் ஏற்றப்படும் வரை திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிப்போர் தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போட மாட்டார்கள். மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்குப் போடுவார்கள். மேலும், வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள். அந்த நேரத்தில் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.

திருவண்ணாமலை மகாதீபம் கார்த்திகை

இந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.18 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, மறுநாள் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.37 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் நாளை முதல் 3 நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். நகரைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 இடங்களில் தற்காலிகப் பஸ் நிலையங்கள், 130 இடங்களில் கார் நிறுத்தும் இடங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தப் பக்திப் பெருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!