தூங்கிக்கொண்டிருந்த மனைவி மீது மின்சாரம் பாய்ச்சி கொன்ற கொடூரம் - நாடகமாடிய கணவன் கைது!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியை மின்சாரம் பாய்ச்சிக் கொன்று விட்டு, உடல்நலக்குறைவால் மனைவி இறந்தது போல நாடகமாடிய கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (43). இவருக்கும் கலையரசி (33) என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில காலமாகவே தனது மனைவியின் நடத்தையில் கருணாகரனுக்குச் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கலையரசி வழக்கம் போல உணவு அருந்தி விட்டுத் தூங்கச் சென்றுள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நள்ளிரவு நேரத்தில், கருணாகரன் மின்சார வயர்களைக் கொண்டு கலையரசியின் கை மற்றும் கால்களில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி கலையரசி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மறுநாள் காலை, தனது மனைவியின் தந்தைக்குப் போன் செய்த கருணாகரன், "கலையரசி காலை 7 மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை, எழுப்பிப் பார்த்தும் அசைவின்றி இருக்கிறார்" என்று கூறி நாடகமாடியுள்ளார். அங்கு விரைந்து சென்ற கலையரசியின் பெற்றோர், மகளின் திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கருணாகரனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு மின்சாரம் பாய்ச்சிக் கொன்றதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து கருணாகரனைப் போலீசார் முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தனர். 14 ஆண்டு கால திருமண வாழ்க்கை சந்தேகத்தின் பலியால் மூன்று சிறுவர்கள் அநாதையாக நிற்கும் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
