ஆணவக் கொலையா? காதலியின் வீட்டில் முகத்தில் காயங்களுடன் காதலனின் சடலம்... பகீர் கிளப்பும் வானதி சீனிவாசன்!

கன்னியாகுமரியில் காதலியை திருமணம் செய்து கொடுக்க சொல்லி காதலியின் வீட்டில் கேட்டார். அவர்கள் மறுக்கவே காதலியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் “கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகப் பெண்ணும், இந்து பட்டியலின இளைஞரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாகவும், விஷயம் தெரிந்த பெண்ணின் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணை வீட்டுச் சிறையில் முடக்கியதாகவும், தனது காதலியை சந்தித்துப் பேசுவதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பெண்ணின் குடும்பத்தினர் திமுகவில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதால் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய முதலில் மறுத்த காவல்துறையினர் பின்னர் FIR போட்டு விசாரணையைத் துவங்கியதாக தகவல்கள் உலா வரும் நிலையில், இந்த மரணம் தற்கொலையாக இருக்கத் துளியும் வாய்ப்பில்லை என்பதோடு, இது ஆணவக் கொலையாகத் தான் இருக்கும் என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கிறது.
காரணம், நன்கு படித்து இன்ஜீனியராக வேலை பார்க்கும் ஒரு இளைஞர் கோவையிலிருந்து பல நூறு கிலோமீட்டர் தாண்டி வந்து தற்கொலை செய்து கொள்ள எதற்காக காதலியின் வீட்டினை தேர்ந்தெடுத்தார்? கையில் நைலான் கயிருடன் தங்கள் வீடேறி வந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவது பற்றி அவ்வீட்டில் இருக்கும் எவருக்கும் தெரியவில்லையா?
அதிமுக்கியமாக தற்கொலை செய்து கொண்டவரின் முகத்தில் அடிபட்ட காயங்கள் எப்படி வந்தது? காலங்காலமாக பட்டியலின மக்கள் மீது திமுகவினருக்குள்ள வெறுப்பும் வன்மமும் நாம் அனைவரும் அறிந்தது தானே. அரசுப் பொறுப்பில் இருக்கும் பட்டியலின மக்களையே அவமானப்படுத்தும் அறிவாலய உடன்பிறப்புகள், பட்டியலினத்தைச் சேர்ந்தவரைத் தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொள்வார்களா?
அதனால் “இது காதல் தோல்வியில் நடந்த தற்கொலை” என்று கூறும் திமுகவினைச் சேர்ந்த பெண் வீட்டாரின் கட்டுக்கதை நம்பும்படியாக இல்லை. எனவே, இந்த மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ முறையான பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, தங்களின் வாக்கரசியலுக்காக இவ்வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றால் கடும் விளைவுகளை திமுக அரசு சந்திக்க நேரிடும் என்பதையும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!