எதிர்ப்பை மீறித் திருமணம்... திருத்தணி கோவிலில் மகனைச் சரமாரியாகத் தாக்கிய தாய்!
திருத்தணி முருகன் கோயிலில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலியைத் திருமணம் செய்த மகனை, அவரது தாயார் மணக்கோலத்திலேயே சரமாரியாகத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காதலால் நடந்த இந்தச் சம்பவம் கோயில் வளாகத்தில் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
கும்பகோணத்தைச் சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவரை கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வாலிபரின் பெற்றோர் இந்தக் காதலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி நேற்று நவம்பர் 30ம் தேதி அரக்கோணத்தில் பெண் வீட்டார் சம்மதத்துடன் அந்த வாலிபர் தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்னர், புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்துடன் மணப்பெண்ணின் உறவினர்களுடன் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். மலைக்கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு, புதுமணத் தம்பதிகள் வாகன நிறுத்துமிடத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபரின் தாயார், தனது எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்ட மகனை, மருமகள் மற்றும் அவரது உறவினர்கள் கண் எதிரிலேயே சரமாரியாகத் தாக்கி ஆவேசத்தைக் காட்டினார்.

தாயின் இந்தத் திடீர் ஆக்ரோஷத்தைக் கண்டு, வாலிபரின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் செய்வதறியாது கதறி அழுதபடி தவித்தனர். கோயிலுக்கு வந்த மற்ற பக்தர்களும் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்ததால், கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது பற்றித் தகவல் அறிந்து உடனடியாக வந்த திருத்தணி போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். திருமண நாளன்றே மணக்கோலத்தில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
