ஒப்பந்த செவிலியர்களுக்கு ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் பணிபுரியும் எம்.ஆர்.பி (MRP) ஒப்பந்த செவிலியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒப்பந்த செவிலியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதுவரை 4,825 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 8,000-க்கும் மேற்பட்டோரில் முதற்கட்டமாக 1,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 169 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 831 பேருக்கு விரைவில் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

ஒப்பந்த செவிலியர் சங்கத்தினர் முன்வைத்த மிக முக்கியமான கோரிக்கையான 'மகப்பேறு கால விடுப்பு' குறித்து அமைச்சர் கூறியதாவது: "எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்களுக்கும் இனி ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி இதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கான நிலுவைத் தொகையும் (Arrears) வழங்கப்படும்."
2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்த முறையில், 2021 வரை வெறும் 1,871 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், திமுக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய 2,146 பேரைச் சிறப்பு நிகழ்வாகப் பணி நிரந்தரம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த நிலுவைத் தொகை வழங்கும் பணிகள் மற்றும் அரசாணை வெளியிடும் நடைமுறைகள் அனைத்தும் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
