மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது... ரூ.70 லட்சம் சேதம்!
தூத்துக்குடி கடல்கரையில் இருந்து இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 9 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கலைராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஓட்டுநர் ஆண்டோ மற்றும் ராஜ் உட்பட 9 மீனவர்கள் இன்று காலை 5 மணிக்கு கடலில் மீன்பிடிக்க சென்றனர். கரையில் இருந்து சுமார் 8 கடல் மைல் தூரத்தில் சென்றபோது திடீரென பலத்த காற்று வீசியதால் படகில் பழுது எற்பட்டுள்ளது.

இதனால் படகில் தண்ணீர் புகுந்தது. இதனை கவனித்த ஓட்டுநர் படகை கரையை நோக்கி வேகமாக செலுத்தியுள்ளார். முயல் தீவிற்கு கிழக்கே படகை கரைக்கு வரும் வழியில் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து படகை மேடான பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர். உடனடியாக கைபேசி மூலம் அருகாமையில் இருந்த மீன்பிடி படகுகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அருகில் இருந்த மீன்பிடி படகுகள் மற்றும் கரையிலிருந்து சென்ற பைபர் படகில் சென்றவர்கள் சேர்ந்து மீன்பிடி படகில் இருந்த 9பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி படகு முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால் வலை, ஜிபிஎஸ் கருவிகள், மீன்பிடி உபகரணங்கள் என ரூ.70 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
