ஈரோடு சந்திப்பு... காவல்துறைக்கும் தொண்டர்களுக்கும் விஜய் நன்றி!
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே நடைபெற்ற 'தமிழக வெற்றிக் கழக'த்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அக்கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் உருக்கமான நன்றித் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, சுமார் 81 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்ற முதல் பொதுக்கூட்டம் இது என்பதால், இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருந்தன.

ஈரோடு கூட்டத்தின் வெற்றி குறித்து விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியலில் அடியெடுத்து வைத்தது முதல் தங்களுக்குப் பல தெரிந்த மற்றும் தெரியாத தடைகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருப்பதாகவும், அவற்றையெல்லாம் தொண்டர்களின் தூய அன்பின் துணையோடு முறியடித்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வறுமையின் பிடியில் இருக்கும் மக்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதே தனது அரசியல் பயணத்தின் நோக்கம் என்பதையும் அவர் மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.

குறிப்பாக, இந்தப் பிரம்மாண்டமான கூட்டத்தைச் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல், மெச்சத்தகுந்த வகையில் பாதுகாப்பான முறையில் நடத்த ஒத்துழைப்பு நல்கிய ஈரோடு மாவட்டக் காவல்துறையினருக்கு விஜய் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததோடு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கப் பல்வேறு மாற்றங்களையும் செய்திருந்தனர். காவல்துறையினரின் இந்தப் பணிக்கும், கட்டுக்கோப்புடன் நடந்துகொண்ட தனது கட்சித் தொண்டர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலை நோக்கித் தனது பயணத்தைத் தீவிரப்படுத்தியுள்ள விஜய்யின் இந்த நன்றி அறிவிப்பு, கட்சி நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
