கோவையில் 13 வீடுகளில் மெகா கொள்ளை... துப்பாக்கியால் சுட்டு 3 பேரைப் பிடித்த போலீசார்!
கோயம்புத்தூரில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து 13 வீடுகளில் புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று முக்கியக் கொள்ளையர்களை, தீவிர தேடலுக்குப் பிறகு காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட ஹவுசிங் யூனிட்டில் சுமார் 1,800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள் குடியிருப்பவரான இந்த 14 மாடிகள் கொண்ட வளாகத்தில், நேற்று (நவம்பர் 28) மர்ம நபர்கள் நள்ளிரவில் நுழைந்துள்ளனர்.

அவர்கள், பூட்டியிருந்த வீடுகளைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வீட்டில் கொள்ளை நடந்ததாக வந்த முதல் புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொள்ளைச் சம்பவம் ஒரு வீட்டில் மட்டுமல்லாமல், அந்த வளாகத்தில் உள்ள பல வீடுகளில் நடந்திருப்பது தெரியவந்தது. ஏ பிளாக் கட்டிடத்தில் உள்ள 3 வீடுகளிலும், சி3 பிளாக் கட்டிடத்தில் உள்ள 10 வீடுகளிலும் என மொத்தம் 13 வீடுகளில் கொள்ளை நடந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தொடர் கொள்ளையில், 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது.
இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. உயர் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

குற்றவாளிகளை விரைந்து பிடிக்க, மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தக் காவல்துறையினரின் தனிப்படை குழுக்கள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா காட்சிகளை வைத்துத் தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில், ஹவுசிங் யூனிட்டில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று முக்கியக் கொள்ளையர்களை, குனியமுத்தூர் பகுதியில் கோயம்புத்தூர் காவல்துறையினர் தீவிரமாகத் துரத்திச் சென்று பிடித்தபோது, வேறு வழியின்றித் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கொள்ளையர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
