விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் பிரதமர் மோடி... ஜனவரி 13ம் தேதி தமிழகம் வருகை!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி பலத்தை உறுதிப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் மூன்று நாள் பயணமாக தமிழகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தமிழகத் தேர்தலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ள பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதுடன், பாமக மற்றும் ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் போன்றோரை இணைத்து வலுவான தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்க டெல்லி தலைமை தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது.

பிரதமர் மோடியின் தமிழகச் சுற்றுப்பயணம் ஜனவரி இரண்டாவது வாரத்தில், அதாவது ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், பிரதமர் மோடி முதன்முறையாக தமிழக விவசாயிகளுடன் இணைந்து பொங்கல் விழாவைக் கொண்டாடவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் டெல்டா சார்ந்த மற்றும் கொங்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி வருகை தரும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு வடிவம் பெற்றிருக்க வேண்டும் என டெல்லி தலைமை அறிவுறுத்தியுள்ளதால், பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய தமிழக பாஜக தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. கிராமப்புற மக்கள் மற்றும் தமிழகத்தின் கலாச்சார ரீதியான ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்ட இந்தப் பயணம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
