10,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு... பிலிப்பின்ஸில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!
தென்கிழக்கு பிலிப்பின்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்த்து வரும் கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு, உயிரிழப்புகள் மற்றும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ், டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து விழுந்த பிரம்மாண்ட பாறைகளும் மண்ணும் அங்கிருந்த ஒரு வீட்டை முழுமையாக மூடின. அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நான்கு பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி, மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல் டாவோ டீ ஓரோ (Davao de Oro) மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் நிலச்சரிவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததை மீட்புக் குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் இந்த இயற்கைச் சீற்றத்திற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அந்தப் பிராந்தியமே நிலைகுலைந்து போயுள்ளது. தொடர் மழையினால் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கருதி 3,200-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 75-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாகாணங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

பிலிப்பின்ஸ் வானிலை ஆய்வு மையம், வரும் நாட்களில் மழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளதால், மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
