வேண்டுதல் நிறைவேறியது... வீரமாகாளி அம்மனுக்கு கிடாவெட்டி விருந்து வைத்த இஸ்லாமிய தம்பதி!
"மதம் கடந்து மனிதமே மகத்தானது" என்பதற்குச் சான்றாகத் தமிழகத்தின் கலாச்சார தலைநகரான தஞ்சாவூரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மகனின் உடல்நலத்திற்காக இந்து மதக் கோவிலில் வேண்டி, அது நிறைவேறியதால் கிடாவெட்டி விருந்து வைத்து அசத்தியுள்ளது ஒரு இஸ்லாமியக் குடும்பம்.தஞ்சாவூர் விளார் சாலை, நாவலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (52). மளிகைக் கடை நடத்தி வரும் இவருக்குத் தன்சிலா என்ற மனைவியும், பாரீஸ்கான் (27) என்ற மகனும் உள்ளனர். பி.இ பட்டதாரியான பாரீஸ்கான், கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவ சிகிச்சைகள் எடுத்தும் முன்னேற்றம் இல்லாததால், ஜாகிர் உசேன் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
ஜாகிர் உசேனின் கவலையைக் கண்ட நாவலர் நகர் பகுதி மக்கள், அவருக்கு ஆறுதல் கூறினர். அத்துடன், அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவிலைப் பற்றி எடுத்துக் கூறி, அங்கு மனமுருகி வேண்டிக் கொண்டால் பாரீஸ்கான் விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கை அளித்தனர். அண்டை வீட்டாரின் நம்பிக்கையை ஏற்று, ஜாகிர் உசேன் குடும்பத்தினர் ஜாதி, மத பேதமின்றி வீரமாகாளியம்மன் கோவிலுக்குச் சென்று, தன் மகன் நலம் பெற வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.
அவர்கள் வேண்டியபடியே, சில நாட்களிலேயே பாரீஸ்கானின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தங்கள் பிரார்த்தனையை அம்மன் ஏற்றுக்கொண்டதாகக் கருதிய ஜாகிர் உசேன் குடும்பத்தினர், நேர்த்திக்கடனைச் செலுத்த முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று வீரமாகாளியம்மன் கோவிலில் ஜாகிர் உசேன் குடும்பத்தினர் முறைப்படி பொங்கல் வைத்து படையலிட்டனர். பின்னர், தங்கள் நேர்த்திக்கடனாகக் கிடாவெட்டி, அந்தப் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்குக் கறி விருந்து பரிமாறினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இன்றைய சூழலில் மதம் சார்ந்த பிரிவினைகள் ஆங்காங்கே பேசப்பட்டாலும், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களின் உட்பகுதிகளிலும் மனிதமும், பரஸ்பர நம்பிக்கையும் மாறாமல் இருப்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. "கடவுள் ஒருவரே, அவர் காட்டும் அன்பு அனைவருக்கும் பொதுவானது" என்பதைத் தஞ்சை ஜாகிர் உசேன் குடும்பத்தினர் செயலில் காட்டியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
