அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு... 2 பேர் பலி; 8 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் ரோடு ஐலேண்ட் மாகாணத்தில் உள்ள பிராவிடென்ஸ் பகுதியில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக, 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றும், 8 பேர் காயமடைந்தனர் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரவுன் பல்கலைக்கழகத்தின் பாரஸ் மற்றும் ஹாலி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் வளாகத்தில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டப் பலரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் பற்றி அறிந்த போலீசார் உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
பிராவிடென்ஸ் துணை காவல் அதிகாரி டிம் ஓஹரா இதுபற்றிக் கூறுகையில், “கருப்பு உடையில் வந்த ஆண் ஒருவர் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கிறார் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அந்த நபர் எப்படிப் பல்கலைக்கழகத்தின் உள்ளே நுழைந்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அவர் ஹோப் ஸ்ட்ரீட் வழியாகத் தப்பிச் சென்றுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அனைவரும் அந்தப் பகுதிகளைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் மட்டும் பள்ளிகளில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
