பரமபதவாசலை கடந்து சென்ற நம்பெருமாள்... ஸ்ரீரங்கத்தில் எதிரொலித்த 'கோவிந்தா, ரங்கா' கோஷம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்கவாசல்) திறப்பு நடைபெற்றது. நேற்று அதிகாலை 4:30 மணி அளவில், மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டார். இந்த விசேஷ நிகழ்வின் போது அவர் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை ஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்:
நம்பெருமாள் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்களை வலம் வந்து, நாழிகேட்டான் வாசல் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தடைந்தார். சரியாக அதிகாலை 5:45 மணி அளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. "கோவிந்தா... ரங்கா..." என்ற முழக்கங்கள் விண்ணதிர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நம்பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து சென்றார்.

சொர்க்கவாசலைக் கடந்த பின், மணல்வெளி மற்றும் திருக்கொட்டகை வழியாக ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். அங்கு நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலித்த அவர், அதிகாலை 1:15 மணி அளவில் மீண்டும் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் ஸ்ரீரங்கத்தில் இரண்டு முறை சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது ஒரு அபூர்வ நிகழ்வாகும். முதல் முறையாக ஜனவரி 10ம் தேதி (கடந்த ஆண்டு மார்கழி மாத விழா) சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இரண்டாம் முறையாக நேற்று டிசம்பர் 30ம் தேதி இந்த ஆண்டு மார்கழி மாத விழா சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

நேற்று திறக்கப்பட்ட சொர்க்கவாசல் தொடர்ந்து 9 நாட்கள் திறந்திருக்கும். விழா நடைபெறும் நாட்களில் மூலவர் ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருவார். வரும் ஜனவரி 9-ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
