பேச்சுவார்த்தை தோல்வி... கொட்டும் பனியிலும் விடிய விடிய 3வது நாளாக செவிலியர்கள் போராட்டம்!
தமிழகம் முழுவதும் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு செவிலியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. சென்னை மற்றும் கோவையில் தீவிரமடைந்துள்ள இந்தப் போராட்டத்தினால் மருத்துவத் துறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குறிப்பாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறைச் செயலாளருடன் செவிலியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால், செவிலியர்கள் தங்களது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
போலீஸ் கெடுபிடியையும் மீறித் தொடரும் போராட்டம்:
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களைப் போலீசார் கைது செய்து கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டனர். அங்கிருந்து மீண்டும் அவர்கள் போராட்டத்தைத் தொடர முயன்றபோது, இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டுத் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இருப்பினும், "போராட்டம் தோற்றதாகச் சரித்திரமில்லை" என முழக்கமிடும் செவிலியர் மேம்பாட்டுச் சங்கத்தினர், மனவுறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். சென்னையைத் தொடர முடியாத செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற அழைப்பை ஏற்று, தமிழகம் எங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் போராட்டக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

கோவையில் கொட்டும் பனியில் காத்திருப்புப் போராட்டம்:
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்றிரவு திடீரெனத் தங்களது காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். வாட்டும் குளிரையும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது காண்போரைக் கலங்க வைத்தது. தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். முறையான முன்னறிவிப்பு இன்றித் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் குறித்துத் தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம், செவிலியர்களின் கோரிக்கைகளை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள்:
கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது, சம வேலைக்குச் சம ஊதியம் அளிப்பது மற்றும் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. "எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை களத்தை விட்டு நகர மாட்டோம்" எனச் செவிலியர்கள் சூளுரைத்துள்ளனர். போராட்டக்களங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள போதிலும், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பொதுமக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
