வங்கக்கடலில் புதிய தாழ்வுப் பகுதி... அடுத்த 6 நாட்களுக்கு கனமழை...4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்குத் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும், இன்று (நவம்பர் 22, 2025) தென் மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான அபாயகரமான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புதிய தாழ்வுப் பகுதி வலுவடைவதே இதற்குக் காரணமாகும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி வாக்கில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும். இந்தத் தாழ்வு மண்டல நகர்வால், நவம்பர் 27-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று நவம்பர் 22: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 23: தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 24: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 25 முதல் 27 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
