நாகை - புதுச்சேரி புறவழிச்சாலையில் புதிய சுங்கச்சாவடி... நாளை முதல் வசூல் தொடக்கம்.. எவ்வளவு கட்டணம்?!
புதுச்சேரி மற்றும் நாகப்பட்டினம் இடையேயான பயண தூரத்தைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறவழிச்சாலையில், பாகூர் அடுத்த சேலியமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி (Toll Plaza) நாளை டிசம்பர் 24ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தச் சுங்கச்சாவடி அமைப்பதற்குத் தொடக்கம் முதலே உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.
சேலியமேடு பகுதியில் சுங்கச்சாவடி அமைப்பதைக் கண்டித்துப் புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையோர கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக, மதகடிப்பட்டு பகுதியில் ஏற்கனவே ஒரு சுங்கச்சாவடி இருக்கும் நிலையில், வெறும் 25 கிலோமீட்டர் இடைவெளியில் மற்றொரு புதிய சுங்கச்சாவடி தேவையில்லை என்பது அப்பகுதி மக்களின் முக்கிய வாதமாக உள்ளது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்றும் புகார்கள் எழுந்தன. எனினும், சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுங்கச்சாவடியில் பல்வேறு வாகனங்களுக்கான ஒருமுறைப் பயணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணங்கள், கார், ஜீப், வேன்: ஒரு முறை பயணம் செய்ய ரூ.90 வசூலிக்கப்படும். ஒரே நாளில் திரும்பி வர ரூ.140 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பதிவு எண் கொண்ட வணிக வாகனங்களுக்குச் சலுகை விலையாக ரூ.45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மினி பேருந்து மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஒரு முறை பயணத்திற்கு ரூ.150ம், ஒரே நாளில் திரும்ப ரூ.225-ம் கட்டணமாகும். புதுச்சேரி வாகனங்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும்.

பேருந்து மற்றும் லாரிகள் (Truck) போன்ற பெரிய ரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூ.310-ம், அதே நாளில் திரும்பி வர ரூ.470ம் கட்டணம் செலுத்த வேண்டும். புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.155 வசூலிக்கப்பட உள்ளது.
சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களின் சொந்த வாகனங்களுக்கு மாதாந்திரக் கட்டணச் சலுகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வணிக ரீதியான வாகனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
