புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னையில் 19,000 போலீசார் குவிப்பு - விதிமீறினால் பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்!
இன்று நள்ளிரவு 2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், சென்னையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் காவல் துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் முழுவதும் 19,000 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை 6 மணி முதலே இந்த பாதுகாப்புப் பணிகள் தொடங்குகின்றன.

12 போலீஸ் மாவட்டங்களில் 425 இடங்களில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படும். ஜி.எஸ்.டி சாலை, மதுரவாயல் பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் பைக் ரேஸைத் தடுக்க 30 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மெரினா, எலியட்ஸ், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. மணலில் செல்லக்கூடிய பிரத்யேக வாகனங்கள் மற்றும் குதிரைப்படைகள் மூலம் கடற்கரை ஓரம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும். டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
நட்சத்திர ஹோட்டல்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டங்களின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மது அருந்தும் இடங்களில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. நட்சத்திர ஹோட்டல்கள் தவிர மற்ற இடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்.

பொதுமக்களுக்கான முக்கிய எச்சரிக்கைகள்:
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
போதையில் வாகனம் ஓட்டி வழக்கில் சிக்குபவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பாஸ்போர்ட் (Passport) பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்தைச் சீர்செய்ய மாற்று வழி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விபத்தில்லாத புத்தாண்டை வரவேற்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
