“யாருமே கண்டுக்கலை...” தவெக-வில் இருந்து விலகினார் தாடி பாலாஜி... லாட்டரி மார்ட்டின் மகன் கட்சியின் இணைந்தார்!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக இயங்கி வந்த பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, அங்கிருந்து கல்லா கட்ட முடியாமல், தன்னை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று கடந்த சில மாதங்களாகவே புலம்பி வந்ததாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது தவெகவில் இருந்து விலகி லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள 'லட்சிய ஜனநாயக கட்சி'யில் (LJK) இணைந்துள்ளார். புதுச்சேரியில் இன்று நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வின் போது, அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை நேரில் சந்தித்த தாடி பாலாஜி, தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டார். அவருடன் புதுச்சேரியைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களான லியோகுமார், சுனில்குமார், குமரன் மற்றும் சிவராமன் ஆகியோரும் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாடி பாலாஜி விலகியது தவெக தலைவர் விஜய்க்கு ஒரு சிறிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், தவெக-வின் தொடக்க காலத்திலிருந்தே கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் தாடி பாலாஜி முன்னணியில் இருந்து வந்தார். தற்போது அவர் இணைந்துள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பிரபல தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகன் ஆவார். இவர் சில தினங்களுக்கு முன்புதான் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபையில் தனது கட்சியின் பெயரை அறிவித்து, புதுச்சேரியைச் சிங்கப்பூர் போல மாற்றப்போவதாக முழக்கமிட்டார்.

தவெக தலைவர் விஜய்யின் ஆலோசகராகக் கருதப்படும் ஆதவ் அர்ஜுனாவுக்கும், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கும் இடையே அண்மைக்காலமாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், தாடி பாலாஜியின் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. விஜய்யை வழிநடத்துபவர்கள் சரியாக இல்லை என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில், தவெக-வின் முக்கிய முகங்களில் ஒருவரான தாடி பாலாஜியைத் தனது கட்சியில் இணைத்துத் தனது அரசியல் நகர்வைத் தீவிரப்படுத்தியுள்ளார். 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்துத் தொடங்கப்பட்டுள்ள இக்கட்சி, திரைத்துறை மற்றும் தொழில்முறைப் பிரபலங்களை ஈர்ப்பது மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
