காதல் தோல்வியால் வெறித்தனம்... திருமணமான காதலியை வெட்டிக் கொன்ற இளைஞர்!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில், காதலை முறித்துக் கொண்டு வேறொருவரைத் திருமணம் செய்த முன்னாள் காதலியின் வீட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர், அவருடன் வாக்குவாதம் செய்த நிலையில், அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், ஜங்கில் ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக். அதே கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி (20) என்ற இளம்பெண்ணும், தீபக்கும் காதலித்து வந்தனர். ஆனால், அவர்களின் இந்தத் தீவிரக் காதலுக்கு இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பெற்றோரின் எதிர்ப்புக்குப் பிறகு, தீபக்குடனான தனது காதலை ஷிவானி முறித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஷிவானிக்கு அதே பகுதியைச் சேராத வேறொரு நபருடன் முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஷிவானிக்குத் திருமணமாகிவிட்ட நிலையிலும், தீபக் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த ஷிவானி, நேற்று முன்தினம் இரவு ரசூல்பூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்திருந்தார். அன்று இரவு ஷிவானி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, ஷிவானி வந்திருக்கும் செய்தியை அறிந்த தீபக் நள்ளிரவில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தீபக், தன்னுடைய காதலை முறித்துக் கொண்டு வேறொரு நபரைத் திருமணம் செய்து கொண்டது ஏன் என்பது தொடர்பாக ஷிவானியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் காதலன் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஷிவானி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வாக்குவாதம் சிறிது நேரத்திலேயே முற்றியுள்ளது.

வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், ஆத்திரமடைந்த தீபக் தான் மறைத்துக் கொண்டு சென்றிருந்த அரிவாளால் ஷிவானியைச் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஷிவானி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
ஷிவானி வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து அதிகாலை நேரத்தில் குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக அவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஷிவானியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முன்னாள் காதலி ஷிவானியைக் கொலை செய்த தீபக்கைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கான உண்மையான காரணம் குறித்துத் தீபக்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. காதல் தோல்வியால் ஒரு பெண்ணின் உயிர் பறிபோன சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
